தீயினிலே…

உண்ணும் உணவுகூட
உள் நுழைய மறுக்குதடி
உன் நினைவுதானடி
என் நெஞ்சை இறுக்குதடி

புல் வயல் வெளிகள்
உன் நினைவலைகள்
புரண்டு எழுகின்றேன்
புலம்புகிறேன்

உள்ளம் என் நினைவில் நீ
உயிரில் கலந்துவிட்டாய்
அல்லும் பகலும் கவிதைகளில் நீ
அகண்டு விரிந்து நின்றாய்
சொல்லும் பொருளும் நீ
சோகம் விதைத்து விட்டாய்

கள்ளச் சிரிப்புதனைக் காட்டிவிட்டு
மூங்கில் காடு வழி
உரசிச் சென்றாய்
மூண்டது தீ…
தீயுடன் நான் என் இதயம்
இரண்டும்
இரண்டறக் கலக்கிறது

தீ வளி தீயாகும் போதுகூட
நீ சென்ற வழிதனையே பார்க்கிறேன்

நீ சென்றுவிட்டாய்;…
மூங்கில்காடு மூண்டு முடிந்துவிட்டது
மூங்கில்கள் புல்லாங்குழலாகிறது
புயல் தென்றலாகிறது
தென்றலுடன் புல்லாங்குழல் சங்கமமாகிறது
புல்லாங்குழலின்; ரீங்காரம்
என் இதயம் சொல்வது போல்
உன் பெயரையே உச்சரிக்கிறது

Advertisements

தயவுடன்…

உனக்கும் எனக்குமான உறவு
தென்றல் தழுவும்
கிழைகளின் உறவு போன்றது
நீ என்னை நேசித்தாயோ இல்லையோ
நானுன்னை
நேசித்துக்கொண்டே இருப்பேன்

சொல்லும் வார்த்தைகளுக்குள்
சோகம் புதைவது போல்
பார்க்கும் கண்களுக்குள்
காதல் புதைவது போல்
உந்தன் இதயத்தில்
என்னைப் புதைத்துவிட்டு
இல்லையென்று சொலகிறாய்
என்னில்
கல்லறையை விதைக்கிறாய்

வெல்லம் எறும்பை நாடா
இருந்தும்
எறும்பு அதை நாடும்
வெல்லம் முடிந்த பின்பு
எறும்பு நகர்ந்துவிடும்

எறும்பாயிருந்தேன்-என்னை
வெல்லமாய் மாற்றிவிட்டு
எறும்பாய் நகர்ந்தாய்

முடிந்துவிட்டேன் நான்
இன்னும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் நீயாய்
முடித்துவிடாதே
உன் நினைவுகளையாவது
எனக்கு மிச்சம் வைத்துவிடு

 

 

முடிவின்றி்…

வடலிகள் முளைத்தன
பனைகள் ஆயின
இடையில் வந்த காகம்
எச்சமிட்டுச் சென்றது
முளைத்தது
பனையிடுக்கில் அரசமரம்

காலம் செல்லச் செல்ல
பனை காணமல் போனது
அரசின் ஆதிக்கம் அதிகரித்தது

பார்ப்பதற்கு அரசமரம்
நிமிர்ந்து நிற்பது போல்…
நடுவில் பனை நசிந்தபடி…

மூச்செடுக்கும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயங்கள்
எதையோ கடன் கேட்கும்

நாட்டப்பட்ட மரங்களுக்கு
நன்கு வேர்விட்டு
நீர் எடுக்க உரிமையுண்டு

ஒட்டியபடி வாழ்ந்த அரசு
ஒருவாறு நிலத்தில் வேர் விட்டது
பூட்டப்பட்டன விலங்குகள்
பனையின் வேர்களிலே…

மழை மறைத்த குடையாய்
பசி போக்க உணவாய்
உடல் உரத்திற்கு ஒடியலாய்
எம் வாழ்வோடு
இணைந்திருந்த பனை
ஒடியலாய் ஒடிந்தது

குருத்துக்கள் விடமுயன்று
புரையேறி முடங்கியது
எதிர்காலத்தை
அண்ணாந்து பார்த்தபடி…

 

அர்த்தம்

நான் துவண்டுவிழும்போதெல்லாம்
நம்பிக்கை வார்த்தை தந்து
துளிர் விடச் செய்தாய்

தோல்வி கண்டு அழுவதற்கு
மடி தந்தாய்- மறுகணமே
மலையளவு நம்பிக்கைத்
துளி தந்தாய்

வெற்றிவாகை சூடி வந்த போது
வீரனாய்த் திலகமிட்டாய்
வேகம் கொண்டெழுந்த போது
அமைதியை நிலைக்கவைத்தாய்

மனிதனாய் நான் வாழ- காதலியே
காதலெனும் வழிதந்து
உலகப்புள்ளியதில்
என்னையும் இணையவைத்தத்தாய்

இதயங்கள் இணைந்த பின்பு
பிரிவென்பது வெறும் வார்த்தையே
ஒரு நொடியில் கோடி தரம்
உன்நினைவு எனக்கும்
என் நினைவு உனக்கும்
வரும் எனில்
அது தான் உன்மைக்காதல்

சங்கதி

 

மேகங்களை முட்டும்
முகில்கள்
தாகங்களை மூட்டும்
பாலைவனங்களை
கடந்துதான் செல்கிறது
ஆனால்
கருணைதான் இல்லை
முகில்களுக்கு

அம்மண மேனியுடன்
பச்சிளம் பிஞ்சுகள்
உணவின்றித் தவித்திட
பட்டாசு வெடிகளோ
தாராளம்
பகட்டான உலகினில்

சந்திகள் எங்கினும்
எம்மிளம் சந்ததி
சங்கதி பேசுது
சரித்திரம் காண்பது எப்போது?

வஞ்சக நெஞ்சங்கள்
வங்கியில் பணம் சேர்த்து
கங்கையில் மூழ்குது
காசிக்குச் செல்லுது

எம்மினப் பெண்களின்
கண்களின் கண்ணீர்
கரைஞ்சு போகுது
கடல்ல சேருது
தொலைக்காட்சித் தொடரால

வெளிநாட்டுக் காசில
வேண்டின வாகனம்
வீதி விபத்தில
முடிஞ்சு போகுது

போன உசிருக்குப் புறத்தால
பக்கம் பக்கமா
மரண அறித்தல்
பறந்து போகுது
கரைஞ்சு போகுது

குஞ்சைக் காக்கும்
கோழிகள் போல்-நாம்
கட்டிக் காத்த கலாசாரம்
கவிண்டு கிடக்குது
புரண்டெழும்புது

என்ன நடக்குது
ஏது நடக்குது
சொல்லத் தெரியல்ல
சோகம் முளைக்குது

நெல்லுக்கிறைத்த நீர்
புல்லுக்குப் போகுது
புல்லு முளைக்குது
நெல்லு மடியுது

பல்லுப் போகுது
சொல்லும் போகுது
பார்க்கும் இடமெல்லாம்
பகட்டாத் தெரியுது

உறுதியுரை

இது விதியல்ல
உலக நியதி

நீயும் நானும்
இதயமாகிய போதும்
நீயும் நானும்
நிலவாகிய போதும்
நீயும் நானும்
நிழலாகிய போதும்
நீயும் நானும்
இருளாய் இரண்டறக் கலந்த போதும்
தொடராத அந்த வார்த்தை
இப்போது
தீயாய்ச் சுடுகிறதே

உறக்கங்களில் நடு இரவில்
உளறும் பொழுதில் கூட
உன் பெயர் சொல்லும் நாட்களில்
யார் தடுத்தார்கள்

வயல் உழவும்
விதை விதைக்கவும்
களை எடுக்கவும்
கதிர் அறுக்கவும்
தேவையான அவர்கள்
சொந்தமாகும் போது
ஏன் குமுறுகிறீர்

மனிதன் மனிதத்தை
மறந்ததால்தான்- இன்று
சாதி சதிராடுகிறது

ஓ…
சாதி எனும் பேய்
இன்றும் உம் மனதில்
அ(ஒ)ழியவில்லையா?

என் இனிய தோழியே
நான்…நீ…
இணைவது முக்கியமல்ல
பிரிந்த பின்பும் இதயத்தால்
இணைந்திருப்பதே முக்கியம்
உடல்களை பிரிப்பது சுலபம்
ஆனால் உள்ளங்களை…

தென்றலாய்…
காற்றாய்…
புயலாய்…
வீரிய பெரும் சூறாவளியாய்
மாறிய போது கூட
இணைந்தே இருப்பது
அன்பின் இதயங்கள்தான் என்பதை
இந்த சிறிய உலகில் வாழும்
பெரிய மனிதர்கள் புரியட்டும்

பொறுத்திடு…

புன்னகைகளுடன்
புறப்படும் கணங்களில்
புயல் வந்து தாக்கியதே

மௌனங்களாய்த்தான் இருந்தன
மேகங்கள்
புயலை எப்படிக் கக்கியது?
எப்போதுமே புன்னகையினை
பரிசளிக்கும் நீ
என் இதயத்தில் சுமையினை
சுமத்திவிட்டாயே!

மரணத்தினைக்கூட
சுகமாய் ஏற்றுவிடலாம்
மௌனத்தின் வலி
கொடிதிலும் கொடிது

இலாவகமாய்ப் பறந்த
இதயங்களை
விலங்கிட எப்படி முடியும்
இப்போது இருள் சூள்கறது
எப்போதோ விடியும்
அதுவரை பொறுமனமே…