Archive | ஓகஸ்ட் 30, 2010

இதய ஒலி

நிலத்தை விட்டு
உயரப்பறந்த போதுதான்
நிஜங்கள் புரிந்தது

நடப்பதற்கு
பாதைகள் தேடித் தேடி
நடைபிணம் ஆகிவிட்டோம்

குரைத்துக் குரைத்து
களைத்துப்போனது மட்டுமல்ல
வயிறுகளும் ஒட்டிவிட்டன

கொடைக்கு வந்தவர்கள்
கோடியைச் சுற்றினர்
உடைக்கு மட்டும்தான்-இங்கு
உரிமையுண்டு

புடைக்கும் சுளகுகளில்
பறக்கும் உமியாகி
விளைச்சல் நிலம் தேடுகின்றோம்
மீண்டும் முளைத்தெழுவதற்கு

உவர்க் காற்றினிலே
அம்மண மேனியுடன்
அலைந்து திரிந்து
உடல் முழுவதும்
உலகப்படம் வரையப்பட்டது

வணங்கும் கடவுளெல்லாம்
வையகம் மாறிவிட
கனத்த மனத்துடன்
பிணக் குவியலை
கடந்து செல்கிறோம்

எடுத்துக் கால் வைக்க
காணாமல் போன அன்னை
காலடியில் பிணமாய்

ஓடுங்கள்…
உயிர் தப்புங்கள்…
அது இறந்த அன்னையின்
இறுதித் துடிப்பின்
இதய ஒலி